ஜப்பானுடன் வெற்றிகரமான பொருளாதார உறவு- பிரதமர் மோடி புகழாரம்
இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவானது, வெற்றிகரமான பொருளாதார இணைப்பைக் கொண்டுள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் மாத்திரம் 95,245 கோடி ரூபா (இந்திய நாணய மதிப்பு) ஜப்பானிய முதலீடு இந்தியாவுக்கு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஜப்பான் பிரதமர் சனே தகாய்ச்சி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து, இரு தலைவர்களும் கூட்டாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர்.
இதன்போது கருத்து வெளியிட்ட பிரதமர் நரேந்திர மோடி,
“ பிரதமர் தகாய்ச்சியின் வருகையின் மூலம் நமது சிறப்பு இருதரப்பு உறவு ஒரு புதிய அத்தியாத்தை தொடங்குகிறது. இன்று இந்தியாவும் ஜப்பானும் உலகின் மிகப் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாகத் திகழ்கின்றன.
செழிப்பான, விதிகள் அடிப்படையிலான இந்தோ – பசிபிக் பிராந்தியம் நமது பொதுவான முன்னுரிமையாகும்.
இந்த பிராந்தியத்தின் மிகப் பெரிய ஜனநாயக மற்றும் பொருளாதாரங்களாக நாம் பல முக்கிய முன்னெடுப்புகளை இன்று எடுத்துள்ளோம்.
நாம் ஒன்றிணைந்து இந்த பிராந்தியம் முழுவதிலும் அமைதி, நிலைத்தன்மை, முன்னேற்றத்துக்கு வழிவகுப்போம்.” என்றார்.




