சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க அனுமதி
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 பேரை நீதிபதிகளாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் அனுமதியளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்துக்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 23 நீதிபதி பணியிடங்கள் வெற்றிடமாக உள்ளன.
இந்த வெற்றிடத்தை நிரப்பும் வகையில், கடந்த 2025 ஆம் ஆண்டு மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் அந்தஸ்தில் உள்ள சென்னை உயர் நீதிமன்ற தலைமை பதிவாளர் எஸ்.அல்லி மற்றும் மாவட்ட நீதிபதிகள் முருகன், சுமதி, திருமகள் சந்திரசேகர், தர்மலிங்கம் லிங்கேஸ்வரன், கார்த்திகேயன் பாலதாண்டாயுதம், சண்முகம் கார்த்திகேயன், பாலுச்சாமி முருகேசன், குணசேகரன் ஆகிய 9 பேரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இதேபோன்று, வழக்கறிஞர்கள் என்.ரமேஷ், ஜி.கே.முத்துக்குமார், ராஜேஷ் விவேகானந்தன், சங்கரநாராயணன் ரவிக்குமார், நாகராஜன் திலீப்குமார், இ.மனோகரன், கிருஷ்ணசாமி கோவிந்தராஜன், ரஜினிஷ் பதியில், கே.அப்பாதுரை, ஆர்.அனிதா ஆகிய 10 பேரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டு இருந்தன.
உச்ச நீதிமன்ற கொலிஜியத்தின் கூட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றத்துக்கு நீதிபதிகளாக பரிந்துரைக்கப்பட்ட 19 பேரின் பரிந்துரைகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்தகட்டமாக, இவர்களின் நியமனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் பட்சத்தில், குடியரசு தலைவர் புதிய நீதிபதிகள் நியமனம் குறித்த உத்தரவை பிறப்பிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.





