அடுத்த 24 மணி நேரத்துக்குள் அமைதி ஒப்பந்தம் கைச்சாத்து!
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையிலான அமைதி ஒப்பந்தம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் கையெழுத்தாகும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
எனினும், லெபனானின் தெற்குப் பகுதியில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளதால் ஈரான் அதிருப்தியில் உள்ளதென தெரியவருகின்றது.
Nabatieh நகரம் உட்பட 20 இடங்களிலுள்ள மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவம் எச்சரிக்கை விடுத்த சில நிமிடங்களிலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
இஸ்ரேலின் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்ட வலயத்திற்குள் உள்ள Rihan மற்றும் Sujud உள்ளிட்ட பல கிராமங்களைக் குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக லெபனானின் அரச செய்தி நிறுவனமான NNA தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் ஈரானும் அமைதி ஒப்பந்தத்திற்கான கட்டமைப்புக்குச் சம்மதித்துள்ளதாகவும், அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்ப்பதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் ஷெரீப்,
“நாங்கள் முன்னெப்போதையும் விட அமைதி ஒப்பந்தத்திற்கு மிக நெருக்கமாக இருக்கிறோம். அடுத்த 24 மணித்தியாலங்களுக்குள் இது இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒப்பந்தம் கையெழுத்தானதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் தொழில்நுட்ப மட்டத்திலான பேச்சுவார்த்தைகள் நடைபெறும்.
இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் நிரந்தர அமைதிக்கு வலுவான அடித்தளமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாகிஸ்தான் முன்னின்று நடத்திய இந்த அமைதிப் பேச்சுவார்த்தையின்போது, தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயற்பட்ட வாஷிங்டன் மற்றும் தஹ்ரான் ஆகிய இரு தரப்பிற்கும் அவர் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இஸ்லாமாபாத் உடன்படிக்கை கையெழுத்தாகும் துல்லியமான திகதி ஞாயிற்றுக்கிழமையாக இருக்காது என ஈரானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.




