பிரதமரின் டெல்லி விஜயம்: இந்திய ஊடகங்களின் செய்தியை நிராகரித்தது பங்களாதேஷ்
தமது நாட்டு பிரதமர் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளாரென இந்திய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியை பங்களாதேஷ் நிராகரித்துள்ளது.
ஆகஸ்ட் 23 முதல் 25 வரையிலான திகதிகளில் பங்களாதேஷ் பிரதமர் தாரிக் ரஹ்மான் டெல்லிக்கு விஜயம் செய்வார் என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
கடந்த 2024-ஆம் ஆண்டு பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டதை அடுத்து, இரு நாடுகளுக்குமிடையே ஏற்பட்ட விரிசலைச் சரிசெய்யும் முயற்சியாக, கடந்த பெப்ரவரி மாதம் பதவியேற்ற தாரிக் ரஹ்மானின் முதலாவது டெல்லி விஜயம் குறித்து இரு நாடுகளும் சில வாரங்களாகப் பேச்சுகளில் ஈடுபட்டு வருகின்றன.
மாணவர் தலைமையிலான போராட்டங்களை அடுத்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனாவைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு டாக்கா பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கை குறித்துப் பரிசீலித்து வருவதாக இந்தியா தெரிவித்துள்ளது.
இது குறித்து ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு கருத்துத் தெரிவித்த ரஹ்மானின் ஊடகச் செயலாளர் ஏ.ஏ.எம். சலே, “விஜயம் தொடர்பில் இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” என்று கூறியதுடன், ஹசீனா மற்றும் “ஏனைய தலைமறைவுக் குற்றவாளிகளை” நாட்டுக்கு அனுப்புவது தொடர்பாக இந்தியாவின் பதிலுக்காக டாக்கா காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.




