நேபாளத்தில் பலி எண்ணிக்கை 162 ஆக அதிகரிப்பு: 33 பிரித்தானியர்கள் மாயம்
சீனாவின் திபெத் தன்னாட்சிப் பகுதி மற்றும் நேபாள எல்லையோர இமயமலைப் பகுதியில், பாறைகளும் சேறும் சகதியும் நிரம்பிய மலைச்சரிவு ஆற்றில் திடீரென சரிந்து விழுந்ததால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த இயற்கை பேரிடரில் சிக்கி இதுவரை 162 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், நூற்றக்கணக்கானோரைக் காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்றுள்ள ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்களில், சுமார் 400 வெளிநாட்டவர் உட்பட 579 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என நேபாள சுற்றுலாத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
தீவிரப்படுத்தப்பட்டுள்ளதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என காவலத்துறை செய்தித் தொடர்பாளர் அபி நாராயண் கப்லே தெரிவித்துள்ளார்.
காணாமல்போன சுற்றுலாப் பயணிகளில் அமெரிக்காவைச் சேர்ந்த 47 பேர், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 34 பேர், பிரித்தானியாவைச் சேர்ந்த 33 பேர் மற்றும் கனடாவைச் சேர்ந்த 24 பேர் அடங்குவர்.
இதேபோல், திபெத்தின் கியிராங் (Gyirong) பகுதியில் 558 பேரைக் காணவில்லை என்றும், அதில் 260 பேர் வெளிநாட்டவர் என்றும் சீன அரசு ஊடகம் (CCTV) செய்தி வெளியிட்டுள்ளது.
நிலச்சரிவால் கட்டடங்கள், பாலங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் அடித்துச் செல்லப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேபாள ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
மீட்புப் பணிகளுக்கு உதவ அமெரிக்கா 5 லட்சம் டாலர் நிதியுதவி மற்றும் பேரிடர் மீட்புக் குழுவை அனுப்பியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையும் நிவாரணப் பொருட்களை அனுப்பி வருகிறது.
தொடக்கத்தில் நிலநடுக்கம் காரணமாகவே பனிப்பாறை சரிந்து வெள்ளம் ஏற்பட்டதாகக் கருதப்பட்ட நிலையில், பனி மற்றும் பாறைகள் திடீரென சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட அதிர்வே நிலநடுக்கத்தைப் போன்ற ஆற்றலை வெளியிட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் விளக்கமளித்துள்ளது.
கைலாஷ் மானசரோவர் யாத்திரை சென்ற பல யாத்ரீகர்களும் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எல்லைப் பகுதிகளில் மின்சாரம் மற்றும் தொடர்பு வசதிகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளதால், காணாமல்போன உறவினர்களைத் தேடி அப்பகுதி மக்கள் மீட்பு முகாம்களில் குவிந்து வருகின்றனர்.
ஹெலிகாப்டர்கள் மூலம் காயமடைந்தவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன.




