பாவிப் புயலின் நகர்வு : சீனா, தைவான், ஜப்பான் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் மணிக்கு சுமார் 200 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்றுடன் உருவான பாவி புயல், தைவானை நோக்கிச் நகர்ந்துக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆசிய-பசிபிக் பிராந்தியத்தைத் தாக்கக்கூடிய மிக வலிமையான புயலாக இது இருக்கலாம் என்பதால், வரக்கூடிய சீரற்ற வானிலைக்கு மக்கள் தயாராக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுமார் 1,000 கிலோமீட்டர் விட்டம் கொண்ட இந்தப் புயல், சனிக்கிழமை மாலை சீனாவின் கிழக்கு ஃபுஜியான் மாகாணத்திற்குள் நுழைவதற்கு முன்பு, வடக்கு தைவானுக்கு அருகில் கடந்து செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சீன தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
1987-ஆம் ஆண்டிற்குப் பிறகு தைவானைத் தாக்கிய மிகப்பெரிய புயல் பாவி என்றும், இதுபோன்ற பெரிய புயல்கள் சமீபத்திய ஆண்டுகளில் அரிதாகவே ஏற்பட்டதாகவும் தைவானின் வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.
காலநிலை மாற்றம் காரணமாக, சீனா, ஜப்பான் மற்றும் தைவான் ஆகிய நாடுகள் இதுபோன்ற அழிவுகரமான வானிலை நிலைகளுக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக இந்த ஆண்டின் எல் நினோ காரணமாக அதிகரித்து வரும் கடல் வெப்பநிலை, இதுபோன்ற கடுமையான புயல்கள் அடிக்கடி ஏற்பட வழிவகுத்துள்ளது.
தைவான் அதிபர் லாய் சிங்-டெய், மூன்று நாட்களுக்குத் தேவையான உணவு மற்றும் கைவிளக்குகளுடன் ஒரு அவசரக்காலப் பையைத் தயார் செய்யுமாறு மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜப்பான் வானிலை ஆய்வு மையம், ஒகினாவா தீவுவாசிகளை பலத்த காற்று, நிலச்சரிவுகள், வெள்ளம் மற்றும் உயர் அலைகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறு எச்சரித்துள்ளது.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் வெப்பமண்டலச் சூறாவளி ஆய்வாளரான சியாங்போ ஃபெங், இந்தப் புயல் நீண்ட காலமாக கடலில் இருப்பதாலும், சூடான கடல்நீரிலிருந்து அதிக வலிமையையும் ஈரப்பதத்தையும் பெற்றிருப்பதாலும், அது நிலத்தைத் தாக்கும்போது ஏற்படுத்தும் சேதம் பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்று கூறுகிறார்.
புயலின் பாதையில் ஏற்படும் ஒரு சிறிய மாற்றம் கூட பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர் மேலும் கூறினார்.





