யாழில் பொலிஸ் விசாரணைக்கு சென்ற நபர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காகச் சென்ற நபர் ஒருவர், பொலிஸ் நிலையத்துக்குள்ளேயே திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த ப. சுரேஷ்குமார் (வயது 41) என்பவரே இவ்வாறு துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
இவருக்கும் இவரது பக்கத்து வீட்டுக்காரருக்கும் இடையே நீண்டகாலமாக வீதி ஒழுங்கை (பாதை) தொடர்பான தகராறு நிலவி வந்துள்ளது.
இது தொடர்பாக சுரேஷ்குமார் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
குறித்த முறைப்பாடு தொடர்பான விசாரணைக்காக இரு தரப்பினரும் நேற்று பொலிஸ் நிலையத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
பொலிஸார் முன்னிலையில் விசாரணை இடம்பெற்று, இரு தரப்பும் சமாதானமாகப் போவதற்குச் சம்மதம் தெரிவித்தனர்.
விசாரணைகள் நிறைவடைந்த கட்டத்தில், பொலிஸ் நிலைய நாற்காலியில் அமர்ந்திருந்த சுரேஷ்குமார் திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் மீதான மரண விசாரணைகளை யாழ். பிராந்திய திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
மரணத்துக்கான உண்மையான காரணத்தைக் கண்டறிவதற்காகச் சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்துக்குள் விசாரணைக்குச் சென்ற நபர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், யாழ்ப்பாணம் பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.





