கால்பந்து உலகின் ராஜாவுக்கு ‘கௌரவ அழைப்பு’
சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ள லியோனல் மெஸ்ஸிக்கு (Lionel Messi) கௌரவமளிக்கும் வகையில், அக்டோபர் மாதம் சொந்த நாட்டில் நடைபெறும் நட்புரீதியிலான போட்டியில் (Friendly Match) பங்கேற்குமாறு அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனம் அழைப்பு விடுத்துள்ளது.
2022 உலகக்கோப்பையை அர்ஜென்டினாவிற்கு வென்று கொடுத்த மெஸ்ஸி, இந்த மாதத் தொடக்கத்தில் சர்வதேசப் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.
39 வயதான மெஸ்ஸி, இந்த நட்புரீதியிலான போட்டியில் விளையாடுவாரா என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
“நமது அணியின் அடையாளம், நமது கேப்டன் மற்றும் உலகின் சிறந்த வீரரான லியோனல் ஆண்ட்ரெஸ் மெஸ்ஸிக்கு உரிய முறையில் விடைபெறும் கௌரவத்தை அளிப்பதற்காக, இங்கு அர்ஜென்டினாவில் விளையாட அவருக்கு அழைப்பு விடுத்துள்ளோம்,” என்று அர்ஜென்டினா கால்பந்து சம்மேளனத் தலைவர் கிளாடியோ டாப்பியா (Claudio Tapia) சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அக்டோபர் 7 அன்று பியூனஸ் அயர்ஸில் உள்ள மான்யுமென்டல் மைதானத்தில் (Monumental Stadium) அர்ஜென்டினா, பெனின் (Benin) அணியை எதிர்கொள்கிறது; இந்தப் போட்டியிலேயே பங்கேற்குமாறு மெஸ்ஸிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த சர்வதேசப் போட்டி இடைவெளியின் போது கோர்டோபாவில் (Córdoba) பொலிவியாவுடனும், பியூனஸ் அயர்ஸில் பர்கினா பாசோவுடனும் (Burkina Faso) அர்ஜென்டினா மோதவுள்ளது.




