யாழ். திருவள்ளுவர் பண்பாட்டு மையம் மாநகர சபைக்கே சொந்தம்: தீர்மானம் நிறைவேற்றம்
யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் யாழ். மாநகர சபைக்கே முழுமையாக உரித்தானது என்றும், அதில் எவரும் அத்துமீறி உள்நுழைய முடியாது என்றும் யாழ். மாநகர சபையில் இன்று ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று மேயர் திருமதி விவேகானந்தராஜா மதிவதனி தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, மாநகர சபைக்கான முதலீடுகளும் சொத்துக்களும் சபைக்கே உரித்தானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்தப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.
ஈ.பி.டி.பி. கட்சியின் உறுப்பினரும் முன்னாள் மேயருமான திருமதி ப.யோகேஸ்வரி இந்தப் பிரேரணையை முன்மொழிந்து உரையாற்றினார்.
அவரது உரையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-
“மாநகர சபைக்குச் சொந்தமான காணியில் இந்திய அரசின் கொடையாக உருவான இந்த மையத்தை நிர்வகிக்கும் முழு உரிமையும் சபைக்கே இருக்க வேண்டும்.
மத்திய அரசின் புத்தசாசன அமைச்சு இதன் நிர்வாகத்தைத் தன்வசம் வைத்திருக்க முற்படுவது அதிகாரப் பரவலாக்கல் கோட்பாட்டுக்கு முரணானது.
கூட்டு நிர்வாகம் என்ற போர்வையில் மத்திய அரசு உள்நுழைந்துள்ளது. நிர்வாகக் குழுவில் கொழும்பு அதிகாரத்தைச் சார்ந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது மாநகர சபையின் அதிகாரத்தைப் பலவீனப்படுத்துகின்றது.
நிர்வாகக் குழுவில் மாநகர சபை சார்பான உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்த மையம் சுயசார்பு நிலையை அடையும் போது, அதன் முழுமையான நிர்வாகம் மாநகர சபையிடம் சட்டப்பூர்வமாக ஒப்படைக்கப்பட வேண்டும்.
இதன் மூலம் ஈட்டப்படும் வருமானம் உள்ளூர் மக்களின் கலாசார மேம்பாட்டுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.
“சொத்து எமது மாநகரத்தினுடையது. அதிகாரம் மட்டும் ஏன் அந்நியப்பட வேண்டும்?” என்று உறுப்பினர் யோகேஸ்வரி எழுப்பிய கேள்விக்குச் சபையின் அனைத்து உறுப்பினர்களும் முழுமையான ஆதரவை வழங்கினர்.
இதனையடுத்து, இந்தப் பிரேரணை சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.





