ஈரான்-அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம்!!! வொஷிங்டனில் அரசியல் கொந்தளிப்பு
போரை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேஅமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, வொஷிங்டனில் அரசியல் விவாதம் தீவிரமடைந்துள்ளது .
ஜனநாயகக் கட்சியினர் ஒப்பந்தத்தின் விவரங்களையும், போர் தொடர்பான ஆதாயங்கள் மற்றும் இழப்புகளையும் தெரிந்துகொள்ள விரும்புகிறார்கள்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பும் அவரது ஆதரவாளர்களும் இந்த முன்னேற்றத்தை ஒரு பெரும் இராஜதந்திர வெற்றி எனக் கூறுகின்றனர்.
எவ்வாறாயினும், இந்த ஒப்பந்தம் மத்திய கிழக்கில் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெற முடியாது என்றும் துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் கூறியுள்ளார்.
இந்நிலையில், ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தின் விதிமுறைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
போரின் முடிவுகள் என்னவென்பதையும், ஈரான் என்ன நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டது என்பதையும் அறிந்துகொள்ள பொதுமக்களுக்கு உரிமை உண்டு என்று கூறும் ஜனநாயகவாதிகளிடையே கடுமையான கவலை நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
சர்வதேச ஊடகங்களின் படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை அன்று ஒரு ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
அதனைத் தொடர்ந்து, ஈரானின் அணுசக்தித் திட்டம், தடைகளைத் தளர்த்துதல் மற்றும் பிற முக்கியப் பிரச்சினைகள் குறித்து 60 நாட்களுக்குப் பேச்சுவார்த்தைகள் தொடரும்.
ஆரம்ப ஒப்பந்தம் அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி, ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை மீட்டெடுக்கும் என்று ஈரான் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஆனால், இரு நாடுகளும் இந்த ஒப்பந்தத்திற்கு வெவ்வேறு விளக்கங்களை அளிப்பதாகவும், இது எதிர்காலத்தில் புதிய மோதல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என்றும் சில அமெரிக்கத் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதற்கிடையில், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அணுசக்தி ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்று ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.





