முடக்கப்பட்ட டாலர்களை மீட்டது ஈரான்
அமெரிக்காவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தம் ஈரானிய மக்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று ஈரான் ஜனாதிபதி Masoud Pezeshkian தெரிவித்துள்ளார்.
இந்த உடன்படிக்கையின் கீழ், ஈரானின் எண்ணெய் மற்றும் பெட்ரோகெமிக்கல் துறைகள் மீதான தடைகள் நீக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கத்தாரில் முடக்கப்பட்டுள்ள ஈரானின் 12 பில்லியன் டாலர் நிதியில், முதற்கட்டமாக 6 பில்லியன் டாலர் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார்.
மேலும், முடக்கப்பட்டுள்ள எஞ்சிய ஈரானிய நிதிகளையும் மீட்டெடுப்பதற்கான தங்களது முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முற்படவில்லை என்று மறைந்த உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி (Ayatollah Ali Khamenei) ஏற்கனவே அறிவித்திருந்ததைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தாங்கள் தற்போதும் அதே நிலைப்பாட்டையே வலியுறுத்துவதாகக் கூறினார்.
ஈரானின் அணுசக்தி செயல்பாடுகள் அனைத்தும் நாட்டின் தேவைகளுக்குப் பொருத்தமான வகையிலும், அறிவிக்கப்பட்ட கொள்கை வரம்புகளுக்குள்ளும் மட்டுமே அமையும் என்று சர்வதேச சமூகத்திற்கு அவர் மீண்டும் உறுதி அளித்துள்ளார்.



