வடக்கில் முதலீடுகளுக்கு தடை ஏற்படுத்தக்கூடாது: அமைச்சர் உத்தரவு
வடக்கு மாகாணத்திற்கு வருகை தரும் முதலீட்டாளர்கள் நிர்வாகத் தடைகள் காரணமாக விரக்தியடைந்து திரும்பிச் செல்லும் நிலை ஏற்படக்கூடாது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களுக்கு தாமதமின்றி உரிய அனுமதிகளை வழங்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
பொதுநல மீன் வளர்ப்பு அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் ‘சன்சக்தி டிரேடர்ஸ்’ (தனியார்) நிறுவனம் முன்னெடுக்கவுள்ள முதலீட்டுத் திட்டம் குறித்து விசேட கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் ஆகியோரின் தலைமையில் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.
ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்தில் ஏற்கனவே நடைபெற்ற கலந்துரையாடலின் தொடர்ச்சியாக இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாணத்திற்கு புதிய முதலீடுகள் வருகை தருவதன் மூலம் பிரதேசங்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதுடன், இளைஞர்களுக்கான புதிய தொழில் வாய்ப்புகளையும் உருவாக்க முடியும் எனத் தெரிவித்தார்.
சட்டத்திற்கு உட்பட்டு முன்னெடுக்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை தனிநபர்களின் சுயநல நோக்கங்களுக்காகத் தடுக்க முடியாது எனக் குறிப்பிட்ட அமைச்சர், சட்டரீதியாக அனுமதிக்கக்கூடிய திட்டங்களுக்கு உரிய அனுமதிகளை விரைவாக வழங்குவது அரச நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாகும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஒருசில தரப்பினரின் எதிர்ப்பு, அறியாமை அல்லது பிறரின் தூண்டுதல்கள் காரணமாக மக்களுக்கு பொருளாதார நன்மைகளை வழங்கக்கூடிய முதலீட்டுத் திட்டங்களை கைவிடுவது பொருத்தமானதல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை, முதலீட்டுத் திட்டங்கள் தொடர்பில் பொதுமக்கள் முன்வைக்கும் சந்தேகங்களையும் கவலைகளையும் அதிகாரிகள் அலட்சியப்படுத்தக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.
சம்பந்தப்பட்ட துறைசார் அதிகாரிகள் விஞ்ஞானபூர்வமான தகவல்களை பொதுமக்களுக்கு புரியும் வகையில் தெளிவாக எடுத்துரைத்து, திட்டத்தின் நன்மைகள் மற்றும் சாத்தியமான தாக்கங்கள் குறித்து முழுமையான விளக்கங்களை வழங்க வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.




