இலங்கை வருகிறார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்
இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விரைவில் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளாரென இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
தூதரக ரீதியிலான ஏற்பாடுகள் தற்போது இடம்பெற்றுவருகின்றன.
பயணத்துக்குரிய திகதி விவரம் இன்னமும் அறிவிக்கப்படாத போதும், அதற்கான ஒழுங்குபடுத்தல்களில் பாதுகாப்பு அமைச்சும், கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகமும் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இலங்கை பாதுகாப்பு அமைச்சிற்குச் சென்று, பாதுகாப்புச் செயலர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது, இந்திய பாதுகாப்பு அமைச்சரின் பயண ஒழுங்குகள், மற்றும் இருதரப்பு நலன்கள் சார்ந்த விவகாரங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்புகளில் இந்தியத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர், மற்றும் துணைப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர்.




