பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரிப்பு!
பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) தெரிவித்துள்ளது.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மாத்திரம் 55 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்த முகமை இங்கிலாந்திலும் வெளிநாடுகளிலும் 300 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 190 கைதுகளை விட கணிசமான உயர்வாகும்.
இந்த அதிகரிப்புக்கு, வளங்களின் விரிவாக்கமே காரணம் என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட குடியேற்றக் குற்றங்களைக் கையாள்வதற்காக அதிக எண்ணிக்கையிலான அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.




