முதல்வர் பதவியை ராஜினாமா செய்யமாட்டேன்: அடம்பிடிக்கும் மம்தா பானர்ஜி!
” மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலில் நாம் தோல்வி அடையவில்லை. எமது வெற்றி களவாடப்பட்டது. எனவே, நான் ராஜினாமா செய்யப் போவதில்லை.”
– இவ்வாறு திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி சூளுரைத்துள்ளார்.
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சி 80 இடங்களைக் கைப்பற்றியது.
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவரான மம்தா பானர்ஜி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதன்போது கருத்து வெளியிட்ட அவர் கூறியவை வருமாறு ,
” நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை. அடுத்தக்கட்ட நகர்வு குறித்து எனது கட்சியினர் ஒன்றுகூடி ஒருமித்த முடிவை எட்டுவோம்.
தேர்தலில் பெரியளவில் வன்முறை நடந்துள்ளது. காவல்துறை, தேர்தல் ஆணையம் என அமைப்பு ரீதியிலான தாக்குதல்கள் நடந்துள்ளன.
இந்தத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் தார்மிக வெற்றி பெற்றிருக்கிறது. எங்களுடைய போட்டி பாஜகவுக்கு எதிரானது அல்ல. அது தேர்தல் ஆணையத்துக்கு எதிரானது.
இந்தத் தேர்தலில் அவர்கள் நியாயமான வெற்றியைப் பெற்றிருப்பார்கள் என்றால் நான் புலம்பியிருக்க மாட்டேன்.’ – என்றார்.




