Houthis அமைப்பின் தாக்குதல் தீவிரம்: சவுதிக்கு நெருக்கடி – ட்ரம்புக்கு தலையிடி
யேமனில் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் சவூதி அரேபியா மீது புதிய கட்டத் தாக்குதல்களைத் தொடுத்துள்ளதாகவும், செங்கடலை ஒட்டிய யேமனின் மேற்குப் பகுதி கடலோரப் பகுதிகளில் தங்களது கட்டுப்பாட்டை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் யேமன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹவுத்திகளின் இந்த அதிவேக முன்னேற்றத்தை எதிர்கொள்வது குறித்து ரியாத்தில் அவசர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனிடையே, ஈரான் மற்றும் வளைகுடா அரபு நாடுகளுக்கு இடையே திட்டமிடப்பட்டிருந்த பேச்சுவார்த்தைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதனால் மத்திய கிழக்கு நாடுகளின் மோதல் மேலும் பரவி, சர்வதேச கச்சா எண்ணெய் விநியோகத்திற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டி கவலைகள் தீவிரமடைந்துள்ளன.
சவூதி அரேபியாவின் வான்வழித் தாக்குதலுக்குப் பதிலடியாக, அந்நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள காமிஸ் முஷைத் (Khamis Mushait) ராணுவ விமான தளத்தைக் குறிவைத்து பல டஜன் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியதாக ஹவுத்திகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
அங்குள்ள விமானப் பட்டறைகள், ரேடார் அமைப்புகள், ஓடுபாதைகள் மற்றும் வெடிபொருட்கள் சேமிப்புக் கிடங்குகளை இலக்கு வைத்து இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலும், தெற்குப் பகுதியில் உள்ள மேலும் மூன்று நகரங்களிலும் சவூதி அதிகாரிகள் அவசரகால எச்சரிக்கையை விடுத்துள்ளனர். ஹவுத்திகளின் இத்தாக்குதலில் 13 பொதுமக்கள் காயமடைந்ததாக சவூதி தலைமையிலான கூட்டணிப் படை) தெரிவித்துள்ளது.
செங்கடலின் நுழைவாயிலில் உள்ள பெரிம் (Perim) தீவைக் கைப்பற்றியது உட்பட, கடந்த சில நாட்களாக ஹவுத்திகள் மேற்கொண்டு வரும் தீவிர முன்னேற்றங்கள் சவூதியின் எண்ணெய் ஏற்றுமதிக்குக் கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த வியாழக்கிழமை சவூதி அரேபியாவின் கிழக்கு-மேற்கு எண்ணெய் குழாய் இணைப்பு மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலால் அதன் இயக்கம் முடங்கியது. இத்தாக்குதலுக்கு ஈராக்கில் உள்ள ஈரான் ஆதரவுப் படைகளே காரணம் என ரியாத் குற்றம் சாட்டியுள்ளது.
1980-களில் நடந்த ஈரான்-ஈராக் போரின் போது ஹார்முஸ் நீரிணைக்கு (Strait of Hormuz) அச்சுறுத்தல் ஏற்பட்டதால், வளைகுடாவில் இருந்து செங்கடல் வரை தன் சொந்த நிலப்பரப்பின் வழியே 1,200 கிலோமீட்டர் (745 மைல்) நீளமுள்ள இந்த எண்ணெய் குழாய் அமைப்பை சவூதி அரேபியா உருவாக்கியது.
தற்போது ஹார்முஸ் நீரிணைப் பாதை பெரும்பாலான இடங்களில் முடக்கப்பட்டுள்ள நிலையில், சவூதி குழாய் அமைப்பின் இயக்கம் நீண்ட நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டால், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் 4 சதவீதம் வரை தடைபடும் அபாயம் உள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.
எப்போது செயல்பாடுகள் மீண்டும் தொடங்கும் என்பதை ரியாத் இதுவரை அறிவிக்கவில்லை.
ஹவுத்திகளின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், வரலாற்றுச் சிறப்புமிக்க செங்கடல் துறைமுகமான மோச்சா (Mocha) உள்ளிட்டப் பகுதிகளில் உள்ள ஹவுத்திகளின் இலக்குகள் மீது சவூதி மற்றும் யேமன் வான்படைகள் குண்டுவீச்சைத் தீவிரப்படுத்தியுள்ளன.
இருப்பினும், செங்கடலை ஒட்டிய நாட்டின் முழு மேற்கு கடலோரப் பகுதியிலும் ஹவுத்திகளே தங்களது முழுமையான கட்டுப்பாட்டைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளதாக யேமனின் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசாங்கத்தின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“ஹவுத்திகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அதற்குப் பதிலடியாக அவர்கள் சவூதி மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை அதிகரித்து, சவூதிக்குக் கூடுதல் அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர்” என்று யேமன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அமெரிக்காவுக்குப் புதிய சவால்
மீண்டும் வெடித்துள்ள இந்த யேமன் மோதல் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு மற்றொரு புதிய சவாலாக உருவெடுத்துள்ளது.
உளவுத்துறை உதவிகளைத் தாண்டி நேரடி ராணுவ தலையீட்டை மேற்கச்சை செய்யுமாறு சவூதி விடுத்த கோரிக்கைகளை வாஷிங்டன் இதுவரை நிராகரித்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சவூதி பட்டத்து இளவரசருடன் தாம் பேசியதாகவும், இப்போரில் தலையிட வேண்டாம் என்று ஹவுத்திகளும் வாஷிங்டனைத் தொடர்புகொண்டு வலியுறுத்தியுள்ளதாகவும் அதிபர் டிரம்ப் வார இறுதியில் தெரிவித்திருந்தார்.
சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், அமெரிக்க பிராந்திய தளபதி அட்மிரல் பிராட் கூப்பரை திங்கள்கிழமை ஜித்தாவில் சந்தித்ததாக சவூதி அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




