அசத்தலான ஆட்டம்: அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது Norway
New York நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற (Group I) லீக் போட்டியில், நோர்வே அணி 3-2 என்ற கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் (Last 32) தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டு கோல்களை (Brace) அடித்து அசத்தினார்.
திங்கட்கிழமை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில்,நோர்வே அணியின் மாற்று வீரர் மார்கஸ் ஹோம்ஹிரென் பெடர்சன் ஒரு கோல் அடித்து அணியை முன்னிலைப்படுத்தினார்.
தொடர்ந்து இரண்டாம் பாதி தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஹாலண்ட் மற்றொரு கோல் அடிக்க, நார்வே 2-0 என முன்னிலை பெற்றது.
இதற்கிடையில், செனகல் அணியின் இஸ்மைலா சார் ஒரு கோல் அடித்து கோல் இடைவெளியைக் குறைத்தார்.
எனினும், செனகல் அணியின் பலவீனமான தற்காப்பு ஆட்டத்தை சாதகமாக்கிக் கொண்ட ஹாலண்ட், மீண்டும் ஒரு கோல் அடித்து நோர்வே யின் வெற்றியை உறுதி செய்தார்.
ஆட்டத்தின் இறுதி நிமிடங்களில் இஸ்மைலா சார் செனகல் அணிக்காக மேலும் ஒரு ஆறுதல் கோல் அடித்தார். இருப்பினும், இன்னும் ஒரு லீக் போட்டி மீதமிருக்கும் நிலையிலேயே நோர்வே அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
கடந்த 18 போட்டிகளில் நோர்வே அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. குரூப் பிரிவில் முதலிடத்தைப் பிடிப்பதற்கான பலப்பரீட்சையில் நோர்வே அணி, வரும் வெள்ளிக்கிழமை பாஸ்டனில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
மறுபுறம், புள்ளிகள் எதுவும் பெறாமல் இருக்கும் செனகல் அணி, தொடரிலிருந்து முன்கூட்டியே வெளியேறுவதைத் தவிர்க்க தங்களது கடைசி லீக் போட்டியில் ஈராக் அணியை கட்டாயம் வீழ்த்த வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளது.





