ஐரோப்பாவில் தங்க நகைகளுக்கு குறி – ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு செய்யும் கள்வர்கள்
ஐரோப்பாவில் கலைப் பொருட்கள் மற்றும் தங்க நகைகளை திருடும் கள்வர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
சமீபகாலங்களில் பெரும்பாலான இடங்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குற்றச்செயல்களுக்காக திருடர்கள் ஆன்லைன் மூலம் ஆட்சேர்ப்பு செய்வதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அக்டோபரில் பாரிஸில் உள்ள லூவர் அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளை, இந்த மாற்றங்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு என்று யூரோபோல் கூறியுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில், கலைப்பொருள் திருடர்கள் அதிக லாபம் தரும் விலைமதிப்புள்ள உலோகங்கள், நகைகள் மற்றும் கலாச்சார கலைப்பொருட்கள் மீது தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர் என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்ட அமலாக்க அமைப்பு அறிக்கையொன்றையும் வெளியிட்டுள்ளது.
முதலீட்டாளர்களும் மத்திய வங்கிகளும் தங்கத்தை ஒரு பாதுகாப்பான புகலிடமாகக் கருதுவதால், கடந்த இரண்டு ஆண்டுகளில் தங்கத்தின் விலை 85 சதவீதம் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் லண்டனின் நேரடித் தங்க வர்த்தக மையத்தை மேற்பார்வையிடும் லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேஷன் London Bullion Market Association , “தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு உயரும்போது, சட்டவிரோதப் பரிவர்த்தனைகளும் சந்தைச் சிதைவுகளும் அதிகரித்து வருகின்றன” என்று எச்சரித்துள்ளது.




