உலகளவில் வைரலான உணவுப் பாதுகாப்பு ஆணையாளரின் அதிரடி வேட்டை
உணவகங்களின் சுகாதாரமின்மை மற்றும் பாதுகாப்பற்ற உணவுகளுக்கு எதிராக மகாராஷ்டிர மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையாளர் துகாராம் முண்டே (Tukaram Mundhe) மேற்கொண்டு வரும் அதிரடி நடவடிக்கைகள் இந்தியா முழுவதும் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளன.
மகாராஷ்டிராவின் உணவுப் பாதுகாப்புத் தலைவராக கடந்த மே மாதம் பொறுப்பேற்றதில் இருந்து, இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட சோதனைகளை அவர் நடத்தியுள்ளார்.
இதன் அடிப்படையில் டொமினோஸ் (Domino’s), பிட்சா ஹட் (Pizza Hut) மற்றும் மெக்டொனால்ட்ஸ் (McDonald’s) போன்ற சர்வதேச உணவகக் கிளைகள், புகழ்பெற்ற ஹோட்டல்கள் மற்றும் துரித உணவகங்களின் உரிமங்களைத் தற்காலிகமாகப் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளார்.
மும்பை நீதிமன்ற நீதிபதி ஒருவர், தனியார் உணவகங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுவதாகக் கேள்வி எழுப்பிய சில மணி நேரங்களிலேயே, நீதிமன்ற உணவகங்களில் சோதனை நடத்திய அவரது குழுவினர், உரிமமின்றி இயங்கிய சில உணவகங்களை உடனடியாக மூட உத்தரவிட்டனர்.
“விதிமுறைகளைப் பின்பற்றத் தவறுபவர்கள் சட்டப்பூர்வ நடவடிக்கைகளை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஏனெனில் இது மக்களின் உயிரோடு தொடர்புடைய விஷயம்” என்று Reuters செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் துகாராம் முண்டே திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் வைரலாகும் படங்கள்
தனது 21 ஆண்டுகால இந்திய ஆட்சிப் பணி (IAS) வாழ்க்கையில் பலமுறை இடமாற்றங்களைச் சந்தித்தபோதிலும், எவ்வித அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் கடமையாற்றி வருகிறார் முண்டே.
அவரது குழுவினர் நடத்தும் சோதனைகளின் போது எடுக்கப்படும் கறைகள் படிந்த சுவர்கள், கரப்பான்கள், எலிகள் மற்றும் காலாவதியான உணவுகள் குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
இதன் விளைவாக, மும்பையிலுள்ள தெருவோரக் கடைக்காரர்கள் முதல் பெரிய உணவகங்கள் வரை தூய்மையைப் பேணத் தொடங்கியுள்ளனர்.
அதிரடி நடவடிக்கைகளுக்காக வணிகர்களிடமிருந்து விமர்சனங்களையும் நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொண்டாலும், பொதுமக்களிடையே அவருக்குப் பெரும் ஆதரவு பெருகி வருகிறது.




