எரிபொருள் விலை 600 ரூபாய் – மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு தள்ளப்படும் இலங்கை!
அடுத்த சில நாட்களில் எரிபொருள் விலையை கணிசமாக அதிகரிக்க வேண்டும் என்று பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
ஒரு லீற்றர் டீசலின் விலையை 600 ரூபாய் வரை அதிகரிக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், “தோராயமாக டீசல் விலை 600 ரூபாய்க்காவது அதிகரிக்கப்பட வேண்டும். மே 6 ஆம் திகதி தரவுகளின்படி, பெட்ரோல் விலையும் குறைந்தது 20 அல்லது 30 ரூபாயினால் அதிகரிக்கப்பட வேண்டும்.
ஆனால் அதனை மானியம் வழங்கி ஓரளவுக்கு சமநிலைப்படுத்த முடியும். எரிபொருள் விலையை அதிகரிக்காமல் இருந்தால் என்ன நடக்குமோ, அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
இது ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைவதற்கு வழிவகுக்கும். ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால் என்ன நடக்கும்? எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கும். இந்த சுழற்சிதான் கடந்த காலங்களிலும் நடந்தது. அதுதான் பொருளாதார நெருக்கடியை நோக்கிச் செல்லும் வழியாகும்.
இது பணவீக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், எரிபொருள் விலையை உயர்த்தாமல் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்தால், அது பணவீக்கத்தில் இன்னும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் விலையை அதிகரிக்கும் போது, தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகப் பிரிவினருக்கு எரிபொருள் மானியத்தை நடைமுறைப்படுத்துவது அத்தியாவசியமானது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.




