கந்தளாயில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, ஜெயந்திபுர பகுதியில் இருந்து பேராறு பகுதியை நோக்கி களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம், போட்டங்காட்டு சந்தியில் கந்தளாயில் இருந்து வான்எல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது.
விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மேலும், மோட்டார் சைக்கிளின் மீது ஏறிச் சென்ற டிப்பர் வாகனம், அருகிலிருந்த தென்னை மரத்தில் மோதிய பின்னரே நின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவரின் சடலம் கந்தளாய் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




