40 ஆண்டுகளுக்கு பிறகு நியூசிலாந்து சென்ற ‘இந்திய பிரதமர்’: வரலாறுகாணாத வரவேற்பு
இரு நாட்கள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூசிலாந்து சென்றடைந்தார். ஆக்லாந்து விமான நிலையத்தில் அவரை, அந்நாட்டு பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆரத்தழுவி வரவேற்றார்.
இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்குச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்துக்கே வந்து வரவேற்றார். கடந்த 40 ஆண்டுகளில் இந்திய பிரதமர் ஒருவர் நியூசிலாந்து வருவது இதுவே முதல்முறை.
விமான நிலையத்தில் ஏராளமான நியூசிலாந்துவாழ் இந்தியர்கள் பிரதமர் நரேந்திர மோடியை மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பிரதமரை வரவேற்கும் விதமாக இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
தனது நியூசிலாந்து பயணத்தின்போது பிரதமர் மோடி, பிரதமர் லக்சனுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துவார் என்றும், கடந்த இரண்டு ஆண்டுகளில் வர்த்தகம், வணிகம், பாதுகாபபு ஆகிய துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து ஆய்வு செய்வார் என்றும் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா – நியூசிலாந்து இடையே கடந்த ஏப்ரல் மாதம் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இது இருதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகத்தை அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




