பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த விரும்பும் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி – சீனா மீது பாய்ச்சல்
பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு ஆழப்படுத்த இருநாட்டு தலைவர்களும் உறுதிப்பூண்டுள்ளனர்.
ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆகியோர் கூட்டு அமைச்சரவை கூட்டங்களின் ஒரு பகுதியாக நேற்றைய தினம் சந்தித்துக்கொண்டனர்.
இதன்போது நாட்டின் பாதுகாப்பு, மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்தாலோசித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த இருவரும், பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும், சீனாவின் கடுமையான பொருளாதாரப் போட்டியை எதிர்கொள்ளவும் இருநாடுகளும் தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.
உற்பத்தித் திறன் மற்றும் மதிப்பிழந்த நாணயம் மூலம் சீனா ஐரோப்பா மீது கடுமையான அழுத்தத்தை செலுத்துவதாகவும் விமர்சித்துள்ளனர்.
எங்கள் சுதந்திரம், எங்கள் பாதுகாப்பு மற்றும் எங்கள் கூட்டுப் பாதுகாப்பைப் பாதுகாக்கத் தேவையானதை நாங்கள் செய்து வருகிறோம்,” என்று ஜெர்மன் ஜனாதிபதி ஃபிரெட்ரிக் மெர்ஸ் தெரிவித்தார்.
அத்துடன் ஏவுகணைப் பாதுகாப்பு மற்றும் நீண்ட தூரத் தாக்குதல் அமைப்புகள் உள்ளிட்ட நோக்கங்களின் பட்டியலை இருநாட்டு தலைவர்களும் அடிகோடிட்டு காட்டினர்.
“பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பில் (OECD) உள்ள மற்ற நாடுகளில் காணப்படும் அரசு ஆதரவை விட குறைந்தது எட்டு மடங்கு அதிக ஆதரவை தனது தொழில்துறைக்கு வழங்குவதன் மூலம் சீனா சர்வதேச வர்த்தக விதிகளை மதிக்கவில்லை என்று கூறி, இரு தலைவர்களும் சீனாவைக் கடுமையாகச் சாடினர்.
“தற்போதைய நிலை இப்படியே நீடிப்பதை நான் ஏற்கத் தயாராக இல்லை, ஏனெனில் இது ஐரோப்பாவில் வேலைவாய்ப்புகளுக்கு நியாயமற்ற முறையில் பாதிப்பை ஏற்படுத்துகிறது,” என்று கூறிய மெர்ஸ், தாம் ஒரு வர்த்தகப் போரை விரும்பவில்லை என்றும், ஆனால் நாணய மதிப்பு மற்றும் தொழில்துறை அதிகப்படியான உற்பத்தித் திறன் குறித்து உரையாடலையே விரும்புவதாகவும் தெரிவித்திருந்தார்.





