FIFA World Cup: ஈரான் அணி அமெரிக்காவில் தங்க அனுமதி மறுப்பு!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் போது, பாதுகாப்பு காரணங்களால் ஈரான் அணி அந்நாட்டில் தங்குவதற்கு அமெரிக்க அரசு அனுமதி மறுத்துள்ளது.
இதன் விளைவாக, ஈரான் வீரர்கள் மெக்சிகோவில் தங்கி அங்கிருந்து போட்டிகளுக்காக அமெரிக்காவிற்கு பயணம் செய்வார்கள் என்று மெக்சிகோ ஜனாதிபதி கிளாடியா ஷீன்பாம் அறிவித்துள்ளார்.
ஈரான் அணி தனது Group G பிரிவின் மூன்று போட்டிகளையும் அமெரிக்காவிலேயே விளையாட வேண்டியுள்ளது
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர்ப் பதற்றங்களுக்கு மத்தியிலும், ஈரான் அணி போட்டிகளில் பங்கேற்பதை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு (FIFA) உறுதி செய்துள்ளது.
விசா சிக்கல்களைத் தவிர்க்கவும், நேரடி விமானப் போக்குவரத்தை எளிதாக்கவும் ஈரான் தனது பயிற்சி முகாமினை மெக்சிகோ எல்லை நகரமான திஜுவானாவிற்கு மாற்றியுள்ளது.
ஈரான் அணிக்கு பதிலாக வேறு நாட்டை சேர்க்கும் பரிந்துரைகளை நிராகரித்த FIFA, திட்டமிட்டபடி போட்டிகளை நடத்த முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டு ஆசியப் பிராந்தியத்திற்கான தகுதிச் சுற்றின் மூன்றாவது சுற்றில் தனது பிரிவில் முதலிடம் பிடித்ததன் மூலம், ஈரான் அணி தொடர்ந்து நான்காவது முறையாக உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.




