உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதய கம்மன்பில சர்ச்சை கருத்து
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஊடாக கோட்டாபய ராஜபக்ச பிரதிபலன் அடையவில்லை. மாறாக பேராயரே பிரதிபலன் அடைந்துவருகின்றார்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவே பிரதிபலன் அடைந்தார் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர்.
2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உள்ளிட்ட கூட்டணியே வெற்றிபெற்றது.
இதன்போது கிடைக்கப்பெற்ற வாக்குகளை அடிப்படையாகக்கொண்டு பார்த்தால், ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திரக்கட்சி வேட்பாளரே 56 சதவீத வாக்குகளைப் பெற்று வெற்றிபெறுவார் என்பது உறுதியாகி இருந்தது.
தேவையான வாக்குகளைவிடவும் அதிக வாக்கு வங்கி இருந்தது. எனவே, தாக்குதலை நடத்திதான் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற நிலை கோட்டாபய ராஜபக்சவுக்கு இருக்கவில்லை.
எனவே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்மூலம் கோட்டாபய ராஜபக்ச பிரதிபலன் அடைந்தார் எனக் கூறப்படுவதை ஏற்கமுடியாது.
ஆனால் பிரதி பலன் அடைந்த ஒருவர் இருக்கின்றார், உயிர்த்த ஞாயிறு தாக்குதலை பலம்பொருந்திய தரப்பொன்றே நடத்தியுள்ளது எனவும், அந்த தரப்பை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டுமெனில் தான் பதவியில் இருக்க வேண்டும் என வத்திக்கானுக்கு தெரியப்படுத்தி, பேராயர் 4 தடவைகள் பதவி நீடிப்பை பெற்றுள்ளார்.
பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்கை, 2022 நவம்பர் மாதம் பதவியில் இருந்து விடைபெற்றிருக்க வேண்டும்.
எனவே, இதன்மூலம் அவரே பிரதி பலன் அடைந்துள்ளார்.” – என்றார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் அருட்தந்தை சிறில்காமினி பெர்ணான்டோவிடம், உதய கம்மன்பில 10 கேள்விகளை எழுப்பி உள்ளார்.





