திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும் – ஸ்டாலின்
“இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும் கட்சியாகச் செயல்பட்ட திமுக இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்” என
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் இதனை பதிவிட்டுள்ளார்.
“மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள் என அவர் பதிவிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உருவாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம்.
தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம். மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன். நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கருணாநிதியின் அன்பு உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி” என்றார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக 73 இடங்களில் வெற்றியும், 31 இடங்களில் முன்னிலையும் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
ஆளும் கட்சியான திமுக 40 இடங்களில் வெற்றியும், 19 இடங்களில் முன்னிலையும் பெற்றுள்ளது. இதனால் தமிழகத்தில் இப்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஸ்டாலின், 74,202 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார். அவரை எதிர்த்து தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு, 82,997 வாக்குகள் பெற்று 8,794 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.




