யாழில் காணி விடுவிப்பில் இழுத்தடிப்பு?
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்று அழுத்தம் வழங்கப்பட்ட போதிலும், கணிசமான கோரிக்கைகளை இராணுவம் நிராகரித்துள்ளது.
வடக்கு மாகாணத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பதற்கான சாத்தியங்கள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அருண ஜயசேகர, ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் பங்குபற்றினார்கள்.
காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அரச அதிகாரிகளும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
ஏனைய மாவட்டங்களில் சில காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் ஓரளவு இணக்கம் தெரிவித்த போதிலும் யாழ். மாவட்டத்தில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளில் கணிசமானவற்றை விடுவிப்பதற்கு இராணுவம் திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளது.
இதன்படி, பருத்தித்துறை – பொன்னாலை பிரதான வீதியில், காங்கேசன்துறை சந்தியில் இருந்து கீரிமலை வரையான வீதியை விடுவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை இராணுவத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
அங்கு கடற்படை முகாம் உள்ளது என்று கோரியே அந்த வீதி விடுவிப்புக்கு மறுப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், யாழ்ப்பாணம் நகரப்பகுதியில் உள்ள சிங்கள மகா வித்தியாலயம், பலாலி இராணுவ மருத்துவமனை, பலாலி கொமாண்டோ பங்களா ஆகியவற்றை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளும் இராணுவத்தால் முற்றுமுழுதாக நிராகரிக்கப்பட்டுள்ளன.
‘பரிசீலனை செய்யப்படும்’ என்ற வாக்குறுதிகூட இந்தக் காணிகள் தொடர்பில் வழங்கப்படவில்லை என்று தமிழ் நாளிதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வயாவிளானில் உள்ள சிறிவேலுப்பிள்ளை வித்தியாலயம், தல்சவனவுக்கு அருகிலுள்ள சிறுவர் பூங்காவின் பாதை, பலாலி சந்திப் பகுதியில் உள்ள சந்தை உள்ளிட்டவற்றை விடுவிக்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இராணுவம் சாதகமாகப் பதிலளித்துள்ளது.





