அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழக அதிகாரிகள் இலங்கையில் முக்கிய பேச்சு!
அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு பல்கலைக்கழகத்தின் (Defense Security Cooperation University) பாதுகாப்பு ஆளுகை நிறுவனத்தின் (Institute for Security Governance – ISG) பிரதிநிதிகள் குழு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
இந்தக் குழுவினர் நேற்று பாதுகாப்பு செயலாளர், எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை, பாதுகாப்பு அமைச்சில் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போது, பாதுகாப்புத் துறைக்காக முன்னெடுக்கப்பட்டு வரும் மற்றும் எதிர்காலத்தில் செயல்படுத்தப்படவுள்ள திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் பயிற்சி திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.
‘பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி’ (Training of Trainers) என்ற கருத்தின் மூலோபாய அமலாக்கமும் வலியுறுத்தப்பட்டது.
அத்துடன் கட்டமைக்கப்பட்ட திறன் மேம்பாட்டின் அதிகரித்து வரும் முக்கியத்துவத்தை பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியதுடன், வலுவான இராணுவப் பயிற்சியுடன் இணைந்து பாதுகாப்புத் துறையின் சிவில் அதிகாரிகளுக்கான சிறப்பு கல்வி மற்றும் பயிற்சியின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
எதிர்கால ஒத்துழைப்புகளை மேலும் பயனுள்ளதாக முன்னெடுக்க விரிவான திறனாய்வு மற்றும் திறன் அடிப்படையிலான மதிப்பீடுகள் தேவைப்படுகின்றன என்பதிலும் இரு தரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.
இக்கூட்டத்தில் பாதுகாப்பு மேலதிக செயலாளர், சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள், முப்படை அதிகாரிகள், ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் (KDU) மற்றும் தேசிய பாதுகாப்புக் கல்லூரி (NDC) ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.




