“ட்ரம்பின் ஆத்திரமூட்டும் கருத்துகளுக்கு பதிலளிக்க மாட்டோம்” – இத்தாலி அமைச்சர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் ஆத்திரமூட்டும் கருத்துகளுக்கு இத்தாலி பதிலளிப்பதை நிறுத்திக்கொள்ளும் என்று இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி ( Antonio Tajani) தெரிவித்துள்ளார்.
துருக்கியில் நேட்டோ தலைவர்கள் சந்திப்புக்குத் தயாராகிக்கொண்டிருந்த நிலையில், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பிரான்சில் நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளுமாறு மெலோனி தன்னிடம் “கெஞ்சியதாக” ட்ரம்ப் குறிப்பிட்டிருந்த நிலையில், அதனை மறுத்த மெலோனி அவர் கதையொன்றை புனைந்துள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேட்டோ மாநாட்டில் இவ்விருநாடுகளின் தலைவர்களும் சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே தனது ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், தடை உத்தரவு தேவை என்ற தலைப்புடன் மெலோனி ட்ரம்ப்பை அன்னாந்து பார்க்கும் வண்ணம் உள்ள புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.
இது இருநாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவில் சிறு விரிசலை ஏற்படுத்தியது.
இந்நிலையிலேயே இது தொடர்பில் கருத்து வெளியிட்ட தஜானி மேற்படி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், டிரம்ப் “தனக்காகத் தானே பேசுகிறார். குறிப்பாக சமூக ஊடகங்களில், தூண்டிவிடுவதை விரும்பும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி நமக்கு இருக்கிறார். எங்கள் நட்பு நாடுகளிடையே சர்ச்சைகளைத் தூண்டாமல் இருப்பதற்காக, இந்தக் கருத்துகளுக்குப் பதிலளிப்பதை நிறுத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.





