கைதி தற்கொலை முயற்சி: மட்டக்களப்பு சிறையில் பரபரப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையில் கைதி ஒருவர் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது:-
அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டிருந்தார். நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணியளவில் மேற்படி இளைஞர் திடீரெனத் தனது கழுத்தை பிளேட்டினால் அறுத்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனால் படுகாயமடைந்த அவரை உடனடியாக மீட்ட சிறைச்சாலை அதிகாரிகள், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் சிறைச்சாலை வளாகத்துக்குள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





