பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் – வெஸ் ஸ்ட்ரீட்டிங்
பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார்.
தொழிற்கட்சி ஆதரவு அமைப்பான ‘புரோகிரெஸ்’ மாநாட்டில் பேசிய அவர், “ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சிறப்பு உறவு தேவை. பிரிட்டனின் எதிர்காலம் ஐரோப்பாவுடன்தான் உள்ளது. ஒருநாள் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவோம்” என்று கூறினார்.
தொழிற்கட்சித் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளராக பார்க்கப்படும் ஸ்ட்ரீட்டிங், பிரெக்ஸிட்டை “பேரழிவான தவறு” என விமர்சித்தார்.
“2026ஆம் ஆண்டில் இந்த அபாயகரமான உலக சூழலில், பொருளாதாரத்தையும் வர்த்தகத்தையும் மீண்டும் வலுப்படுத்தவும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு மற்றும் ‘அமெரிக்கா முதலில்’ கொள்கையால் உருவாகும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், ஐரோப்பாவுடன் இணைந்து செயல்பட வேண்டிய அவசியத்தை பிரிட்டிஷ் மக்கள் அதிகமாக உணர்ந்து வருகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
மேலும், பிரெக்ஸிட்டின் விளைவுகள் குறித்து தொழிற்கட்சி இனி அமைதியாக இருக்க முடியாது என்றும், “மீண்டும் இணைவதற்கான ஆதரவை புதிதாக உருவாக்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.




