பறவைக் காய்ச்சல் எதிரொலி: ஆஸ்திரேலிய கோழி இறக்குமதிக்கு தடை
மேற்கு ஆஸ்திரேலியாவில் பறவைகளிடம் H5N1 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியாவிலிருந்து கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை இறக்குமதி செய்வதை பப்புவா நியூ கினி (PNG) நாடு தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது.
முட்டைகள் , முட்டை சார்ந்த தயாரிப்புகள் உட்பட ஆஸ்திரேலிய கோழிப்பண்ணை தயாரிப்புகள் இறக்குமதி நிறுத்தப்படும் என்று பப்புவா நியூ கினியின் தேசிய விவசாய மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட ஆய்வு அதிகாரம் (NAQIA) அறிவித்துள்ளது.
2024–25 ஆம் ஆண்டில், ஆஸ்திரேலியாவில் 14 லட்சம் டன் கோழி இறைச்சி உற்பத்தி செய்யப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பெரும்பாலான கோழி இறைச்சி உள்நாட்டுத் தேவைக்கே பயன்படுத்தப்பட்டாலும், அதன் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் பாதியை பப்புவா நியூ கினியே வாங்குகிறது.
இதனால் ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வெளிநாட்டு வாடிக்கையாளராக பப்புவா நியூ கினி திகழ்கிறது.
ஆஸ்திரேலியாவின் கோழி இறைச்சி ஏற்றுமதி 2023-24 இல் சாதனை அளவாக 133 மில்லியன் டாலர்களை எட்டியது. இது முக்கியமாக பசிபிக் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
மேலும், 2022-23 நிதியாண்டில் ஆஸ்திரேலியாவின் முட்டை மற்றும் முட்டை தயாரிப்புகளின் ஏற்றுமதி மதிப்பு 15.76 மில்லியன் டொலராக இருந்தது.
“ஆஸ்திரேலியாவின் கோழிப்பண்ணைகள் மற்றும் விவசாய உற்பத்தி அமைப்புகளில் H5 பறவைக் காய்ச்சல் இன்னும் பரவவில்லை.
எனவே, இந்த வர்த்தகத் தடை விதிக்கப்பட்டுள்ளது தேவையற்ற ஒன்றாகும். வனவிலங்குகளில் H5 பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டதை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்.
எங்கள் வர்த்தகக் கூட்டாளிகளுக்குத் தேவையான உத்தரவாதங்களை வழங்க தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.” என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.





