மத்திய கிழக்குக்கான பயணத் தடை தளர்வு!
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவிய பதற்றமான சூழல் காரணமாக ஆஸ்திரேலிய அரசாங்கம் வழங்கியிருந்த பயண எச்சரிக்கையில் தற்போது சில முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய போக்குவரத்து மையங்களுக்கான பயண ஆலோசனையின் எச்சரிக்கை அளவை ஆஸ்திரேலிய அரசாங்கம் குறைத்துள்ளது.
எனினும், அப்பகுதியில் இன்னும் பதற்றமான மற்றும் கணிக்க முடியாத சூழலே நிலவுவதாக எச்சரித்துள்ளது.
பஹ்ரைன், இஸ்ரேல், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) ஆகிய நாடுகளுக்கான பயண எச்சரிக்கை நிலை, இதற்கு முன்பிருந்த நிலை 4-ஆன (Do Not Travel) என்ற எச்சரிக்கையிலிருந்து, நிலை 3-ஆன Reconsider your need to travel என்ற நிலைக்குக் குறைக்கப்பட்டுள்ளது.
வான்வெளி இடையூறுகள் மற்றும் பயண வழித்தட மாற்றங்களால் ஏற்பட்ட நிச்சயமற்ற நிலைக்குப் பிறகு, ஆஸ்திரேலியர்களை ஐரோப்பாவோடு இணைக்கும் முக்கிய மையமாக விளங்கும் இப்பகுதிக்கான எச்சரிக்கை அளவு குறைக்கப்பட்டிருப்பதை சுற்றுலாத்துறை வரவேற்றுள்ளது.
இந்த வார வெள்ளிக்கிழமை அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே முறையான அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங் மற்றும் உதவி வெளிவிவகார அமைச்சர் மாட் திஸ்டில்வெய்ட் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில்,
ஆஸ்திரேலிய வெளியுறவு மற்றும் வர்த்தகத் துறை (DFAT) குறிப்பிட்ட நாடுகளின் நிலவரங்களை ஆய்வு செய்த பின்னரே இந்த எச்சரிக்கை அளவைக் குறைக்க முடிவு செய்ததாகத் தெரிவித்துள்ளனர்.




