5.4 பில்லியன் டாலர் மெகா ஒப்பந்தம்: ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கிய UK நிறுவனம்!
உலகின் முன்னணி சுரங்க நிறுவனங்களில் ஒன்றான Anglo American , ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் உள்ள தனது ஐந்து நிலக்கரி சுரங்கங்களை பிரிட்டனைச் சேர்ந்த தில்மார் Dhilmar Limited நிறுவனத்திற்கு சுமார் 5.43 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த பாரிய ஒப்பந்தத்தில் சுரங்கங்களுடன் சேர்த்து ஊழியர்களுக்கான வீட்டுவசதி மற்றும் மருத்துவ மையங்கள் போன்ற நகர்ப்புற உள்கட்டமைப்புகளும் அடங்கும்.
இந்த ஒப்பந்தத்தின்படி, Dhilmar நிறுவனம் முதற்கட்டமாக 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை Anglo American நிறுவனத்திற்கு உடனடியாகச் செலுத்தவுள்ளது.
மீதமுள்ள 1.575 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எதிர்காலத்தில் நிலக்கரி விலையின் ஏற்ற இறக்கங்கள் மற்றும் உற்பத்தியின் அடிப்படையில் (Price-linked earnout) பகிரப்படவுள்ளது.
இந்த விற்பனை மூலம் கிடைக்கும் முழுத் தொகையையும் தனது நிறுவனத்தின் நிகரக் கடனைக் குறைப்பதற்காகப் பயன்படுத்தவுள்ளதாக Anglo American தெரிவித்துள்ளது.
இந்த விற்பனையில் குவீன்ஸ்லாந்தின் போவன் பேசின் (Bowen Basin) பிராந்தியத்தில் அமைந்துள்ள மொரன்பா நோர்த் (Moranbah North), குரோஸ்வெனர் (Grosvenor), கேப்கோல் (Capcoal) மற்றும் டாசன் (Dawson) உள்ளிட்ட முக்கிய நிலக்கரிச் சுரங்கங்களின் பங்குகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Anglo American நிறுவனம் இதற்கு முன்னர் அமெரிக்காவின் ‘பிபோடி எனர்ஜி’ (Peabody Energy) நிறுவனத்துடன் இந்தச் சுரங்கங்களை விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தியது.
எனினும், கடந்த ஆண்டு மொரன்பா நோர்த் சுரங்கத்தில் ஏற்பட்ட பெரும் விபத்து காரணமாக உற்பத்தி பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிபோடி நிறுவனம் அந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்கியது.
தற்போது புதிய வாங்குநராக ‘தில்மார்’ நிறுவனம் களமிறங்கியுள்ளது.




