சிறுவர் துஷ்பிரயோகம்: இலங்கை பிக்குவுக்கு ஆஸ்திரேலியாவில் சிறை தண்டனை
ஆஸ்திரேலியா மெல்போர்னில் உள்ள தனது விகாரையில் ஆறு இளம் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பௌத்த பிக்குவுக்கு 13 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
பிக்குவின் இச்செயல் நம்பிக்கைக்கு துரோகம் இழைக்கும் செயலாகும் என நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மெல்போர்னின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ‘தம்ம சரண’ (Dhamma Sarana) விகாரையின் தலைமைப் பிக்குவாகச் செயற்பட்ட 71 வயதான நாவொட்டுன்னே விஜித (Naotunne Vijitha) என்பவருக்கே இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பௌத்த சமூகத்தினர் மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்த இவருக்கு, ‘இருண்ட மற்றும் அதிர்ச்சியளிக்கும் மற்றொரு முகம்’ இருந்ததாக நீதிபதி பர்தீப் திவானா (Pardeep Tiwana) சுட்டிக்காட்டியுள்ளார்.
“உங்களது சுயநலப் பாலியல் இச்சையைத் தீர்த்துக்கொள்வதற்காக, குற்றமற்ற இளம் சிறுமிகளை இரையாக்கிக் கொண்டுள்ளீர்கள்” என்றும் நீதிபதி குறிப்பிட்டார்.
தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, நீதிமன்றக் கூண்டிலிருந்தவாறு பிக்கு தனது ஆதரவாளர்களைப் பார்த்துப் புன்னகைத்து கையை அசைத்துள்ளார். இதனைப் பார்த்த பாதிக்கப்பட்ட பெண்கள் கடும் அருவருப்புடன் அவரைப் பார்த்தனர்.
தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட சிறு இடைவேளையின் போது, பிக்கு ஆதரவாளர்களைப் பார்த்துப் புன்னகைத்ததோடு, சிலர் கூண்டின் அருகில் சென்று அவருக்கு நல்வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
இதன்போது பாதிக்கப்பட்டவர்கள் தமது அதிருப்தியை வெளியிட்டதை அடுத்து, பாதுகாப்புப் பிரிவினர் பிக்கு மற்றவர்களுடன் பேசுவதைத் தடுத்தனர்.
கடந்த ஆண்டு நடைபெற்ற விசாரணையில், குழந்தை மீதான பாலியல் ஊடுருவல் குற்றச்சாட்டுகள் 9 மற்றும் சிறுவர் மீதான அநாகரிகமான செயல்கள் புரிந்த குற்றச்சாட்டுகள் 8 உட்பட 17 குற்றச்சாட்டுகளில் விஜித பிக்கு குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
1994 முதல் 2002 ஆம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் ஸ்ப்ரிங்வேல் (Springvale) மற்றும் கீஸ்பரோ (Keysborough) ஆகிய இடங்களில் உள்ள விகாரைக்கு வந்த சிறுமிகளே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
பெற்றோர்கள் அருகில் இருக்கும் நேரங்களிலேயே, பிக்கு அச்சிறுமிகளைக் தந்திரமாகத் தனது அறைக்கு அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண்கள் 2023 ஆம் ஆண்டு பொலிஸில் அளித்த முறைப்பாட்டையடுத்து பிக்கு கைது செய்யப்பட்டார். இக்குற்றங்கள் பாதிக்கப்பட்ட பெண்களைப் பத்தாண்டுகளாகப் பாதித்து, வெட்கத்திலும் பயத்திலும் வாழ வைத்துள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
இலங்கையில் பிறந்த விஜித, 15 வயதில் பிக்குவாக நிலைப்படுத்தப்பட்டார். பின்னர் ஸ்வீடன் நாட்டுக்குச் சென்று அந்நாட்டு குடியுரிமையைப் பெற்ற அவர், 1994 ஆம் ஆண்டு மெல்போர்ன் ‘தம்ம சரண’ விகாரையின் தலைமைப் பிக்குவாகப் பொறுப்பேற்கத் ஆஸ்திரேலியா வந்தார். தண்டனைக் காலம் முடிவடைந்ததும் அவர் ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்பட வாய்ப்புள்ளது.
இவர் குறைந்தபட்சம் 9 ஆண்டுகள் மற்றும் 4 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவித்த பின்னரே பிணையில் செல்ல தகுதி பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.




