மெக்சிகோவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை அமுலில்
மெக்சிகோவின் தெற்கு மாநிலமான சியாபாஸின் (Chiapas) கடற்கரைக்கு அருகில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கமானது 7.4 ரிக்டர் அளவுக்கோளில் பதிவாகியுள்ளதுடன், சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோவின் புவேர்ட்டோ மடேரோ ( Puerto Madero) நகருக்கு அருகில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 10 கிமீ (6 மைல்கள்) ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வைத் தொடர்ந்து, நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிமீ (186 மைல்கள்) தொலைவிற்குள் அமைந்துள்ள கடற்கரைகளில் அபாயகரமான சுனாமி அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.
அதேநேரம் குவாத்தமாலாவில் கட்டிடங்கள் குலுங்கியதாகவும் சில குடியிருப்பாளர்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களுக்கு ஓடிவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்களை மதிப்பீடு செய்து வருவதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.




