சவூதியை தாக்குவோம்: ஹூதிகளின் எச்சரிக்கை
யேமனின் வான் வெளிக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்த முயன்றால் சவூதி அரேபியாவின் விமான நிலையங்கள் மற்றும் முக்கிய சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என யேமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சவூதி அரேபியா , தங்களது வான்வெளியில் ஊடுருவியதாக ஈரான் ஆதரவு பெற்ற ஹூதிகிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஈரானிய பயணிகள் விமானம் ஒன்று சனா சர்வதேச விமான நிலையத்தில் (Sanaa International Airport) தரையிறங்குவதைத் தடுக்க முயன்ற சவூதி அரேபியாவின் போர் விமானங்களை தங்களது ஆயுதப் படைகள் வெள்ளிக்கிழமை எதிர்கொண்டதாக யேமன் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஹூதி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் யஹ்யா சாரி (Yahya Saree) வெளியிட்டுள்ள வீடியோ அறிக்கை ஒன்றில்,
“எங்கள் வான்வெளியை மீறும் முயற்சியில் ஈடுபடுவதையோ அல்லது எங்கள் நாட்டின் மீது ஏதேனும் ஆக்கிரமிப்பை மேற்கொள்வதையோ நிறுத்திக் கொள்ளுமாறு குற்றவாளியான சவூதி எதிரிக்கு எச்சரிக்கை விடுக்கிறோம்.
இத்தகைய நடவடிக்கைகள் தொடர்ந்தால், சவூதியின் நிலம் மற்றும் கடலில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் முக்கிய சொத்துக்களை இலக்கு வைத்து விரிவான பதிலடி கொடுக்கப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “சாத்தியமான விளைவுகள்” எதுவாக இருந்தாலும், சனா மற்றும் தெஹ்ரான் இடையேயான விமான சேவைகள் தொடர்ந்து நீடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அந்த ஈரானிய விமானம் வெற்றிகரமாகத் தரையிறங்கியதாக ஹூதி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
அமெரிக்கா – இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஹூதி தூதுக்குழுவை ஏற்றிக்கொண்டு அந்த விமானம் மீண்டும் தெஹ்ரான் நோக்கிப் புறப்பட்டதாக அவ்ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.





