சொத்து மதிப்பை குறைத்து காட்டிய விஜய் – முறைகேடானது என உயர்நீதிமன்றம் அறிவிப்பு
சட்டசபைத் தேர்தலுக்காக இரண்டு தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்த த.வெ.க. தலைவர் விஜய், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபா சொத்து மதிப்பை குறைத்து காட்டியமை முறைகேடானது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தேர்தலில் விஜய், சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.
இரு தொகுதிகளிலும் விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் முரணான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாகவும், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்துக்கணக்கை மறைத்துள்ளதாகவும் கூறி, வியாசர்பாடியைச் சேர்ந்த பெரம்பூர் வாக்காளரான விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், பெரம்பூர் தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில், தனது சொத்து மதிப்பு, 115 கோடியே 13 லட்சத்து 63 ஆயிரம் ரூபா
எனக் குறிப்பிட்டிருந்த விஜய், திருச்சி கிழக்கு தொகுதிக்கான வேட்புமனுவில், 220 கோடியே 15 லட்சத்து 62 ஆயிரம் ரூபாவெனக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்து மதிப்பை விட, பெரம்பூரில் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைவாக காட்டியமை உண்மைத் தகவலை மறைத்ததற்கு சமம் என்பதால், விஜய் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் தெரிவித்துள்ள சொத்து விபரங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ். ஜே. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, இரண்டு தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்தவர், ஒரு தொகுதியில் 100 கோடி ரூபாய் வரை குறைத்து காட்டியமை முறைகேடானது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பின்னர், இந்த வழக்கு தொடர்பாக பதில் அளிக்குமாறு வருமான வரித்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.




