ICC நீதிமன்றம் மீதான தடைகளை அதிகரிக்க அமெரிக்கா பரிசீலனை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் அமெரிக்காவின் இறையாண்மைக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை அகற்றுவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத்துறை இன்று இது தொடர்பில் அறிவித்துள்ளது.
அமெரிக்கர்கள், குறிப்பாக இராணுவத்தினரை விசாரிப்பதற்கும் வழக்குத் தொடர்வதற்கும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருக்கக்கூடாது என்று ட்ரம்ப் நிர்வாகம் நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகளுக்கு எதிரான தடைகளை ட்ரம்ப் நிர்வாகம் அறிவித்திருந்தது.
அதேபோல் தற்போது பயணத் தடைகள், விசாக்களை ரத்து செய்தல், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கு எதிரான தடைகளை அதிகரித்தல், மற்றும் பிற நாடுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுமாறு இராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை அமெரிக்க அதிகாரிகள் பரிசீலித்து வருவதாக வெளியுறவுத்துறையின் அதிகாரி ஒருவர் ரொய்டர்ஸிடம் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள், இனப்படுகொலை மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரிப்பதற்காக, சர்வதேச சமூகத்தால் 2002 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டிருந்தது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை இராஜதந்திர ரீதியாகத் தனிமைப்படுத்தி, அது அமெரிக்கர்களைக் குறிவைக்க முடியாது என்பதை உறுதி செய்ய ட்ரம்ப் தனது முதல் பதவி காலத்தில் இருந்து வலியுறுத்தி வருகிறார்.




