இலங்கையில் பிறப்பு வீதம் வீழ்ச்சி
2025 ஆம் ஆண்டு வரையிலான, கடந்த பத்தாண்டுகளில் இலங்கையில் கிட்டத்தட்ட 120,000 குழந்தைகள் பிறப்பு குறைந்துள்ளதாக, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
2015 ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டு வரை நாட்டில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, குறிப்பாக 2019 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த சரிவு மேலும் அதிகரித்துள்ளது.
அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, இலங்கையில் 2019-ஆம் ஆண்டில் 319,010 குழந்தைகள் உயிருடன் பிறந்தன.
இந்த எண்ணிக்கை 2020ஆம் ஆண்டில் 301,706 ஆகவும், 2021ஆம் ஆண்டில் 284,848 ஆகவும், 2022ஆம் ஆண்டில் 275,321 ஆகவும், 2023ஆம் ஆண்டில் 247,900 ஆகவும், 2024ஆம் ஆண்டில் 220,761 ஆகவும், 2025ஆம் ஆண்டில் 214,570 ஆகவும் குறைந்துள்ளது.
2019 மற்றும் 2025ம் ஆண்டுகளுக்கு இடையில் உயிருடன் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கையில் சுமார் 33 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளதை இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்த வீழ்ச்சிக்கு, தாமதமான திருமணங்கள், குறைந்த திருமண வீதங்கள், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், இனப்பெருக்க வயதுடைய இளைஞர்களின் இடம்பெயர்வு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு காரணமாக தம்பதியர் பிரிதல் மற்றும் சிறிய குடும்பங்களுக்கான விருப்பம் அதிகரித்தல் உள்ளிட்ட பல காரணங்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பெண்களின் அதிகரித்த பங்கேற்பு, குடும்பக் கட்டுப்பாடு குறித்த மாறிவரும் மனப்பான்மைகள், கருத்தடை முறைகளின் பயன்பாடு மற்றும் கருவுறுதல் தொடர்பான பிரச்சினைகள் ஆகியவையும் பிறப்பு வீத குறைவுக்குப் பங்களித்துள்ளன.
நீண்ட காலத்திற்கு சனத்தொகை நிலைத்தன்மையைப் பேணுவதற்கு, சிறிலங்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 330,000 முதல் 360,000 வரையிலான பிறப்புகள் தேவை என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
இருப்பினும், 2025-ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட பிறப்புகளின் எண்ணிக்கை, அந்த அளவை விடக் கணிசமாகக் குறைவாக-, 214,570 ஆக உள்ளது.




