வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000 மாலுமிகளை மீட்க ஐ.நா. திட்டம் வகுப்பு
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான போரினால் வளைகுடா பகுதியில் சிக்கியுள்ள 11,000-க்கும் மேற்பட்ட மாலுமிகளை மீட்பதற்கான பாரிய திட்டத்தை ஐ.நா அறிவித்துள்ளது.
ஈரான், ஓமான், அமெரிக்கா , பிராந்தியத்தின் பிற கடலோர நாடுகள் மற்றும் கடல்சார் துறையினரின் ஒத்துழைப்புடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஐ.நா. சபையின் சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொதுச்செயலாளர் Arsenio Dominguez தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா, ஈரானுக்கிடையிலான மோதலை முடிவுக்குக் கொண்டுவர கடந்த வாரம் தற்காலிக ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆனால் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விவரங்கள் குறித்து அமெரிக்காவும் ஈரானும் தொடர்ந்து முரண்பட்டு வருகின்றன.
ஈரானின் அணுஆயுதத் திட்டம் , சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) ஆய்வுகளுக்கு உட்படும் என்ற உத்தரவாதங்கள் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
“எதிர்காலத்தில் மிக உயர்மட்ட அணுசக்தி ஆய்வுகளுக்கு ஈரான் முழுமையாக ஒப்புக்கொண்டுள்ளது. இது ‘அணுசக்தி நேர்மையை’ உறுதி செய்யும்,” என்று ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலால் குண்டுவீசி தாக்கப்பட்ட அணுசக்தி தளங்களை ஐநா கண்காணிப்பு அமைப்பால் ஆய்வு செய்ய முடியாது என்று ஈரான் அறிவித்துள்ளது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில்: “ஈரானியர்கள் தங்களது அணுஆயுதத் திட்டத்தின் எஞ்சிய பகுதிகள் குறித்து வலுவான IAEA ஆய்வுகளுக்கு ஒப்புக்கொண்டுள்ளனர்.
ஈரானிய அரசாங்கம் தங்களது உள்நாட்டு மக்களுக்காக என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சொல்கிறது,” என்றார்.
அமெரிக்க ராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ (Marco Rubio) வளைகுடா நாடுகளுக்கான தனது பயணத்தை செவ்வாய்க்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) தொடங்கினார்.
டெஹ்ரானுடனான ஒப்பந்தம் குறித்து விவாதிக்க அமெரிக்க ராணுவ தளங்களைக் கொண்டுள்ள குவைத் மற்றும் பஹ்ரைனுக்கும் அவர் செல்லவுள்ளார்.




