உக்ரைனை பாதுகாக்க அனைத்தையும் செய்வோம்: பிரித்தானிய பிரதமர் தெரிவிப்பு
உக்ரைன் மீதான ரஷ்யத் தாக்குதல்களை முறியடிக்க, தமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தியாவது சாத்தியமான அனைத்தையும் செய்ய வேண்டும் என பிரித்தானிய பிரதமர் ஆண்டி பர்ன்ஹாம் (Andy Burnham) நேச நாடுகளிடம் வலியுறுத்தியுள்ளார்.
‘விருப்பமுடையோரின் கூட்டமைப்பு’ (Coalition of the Willing) மாநாட்டை இணை-தலைமேற்று நடத்திய தனது முதலாவது கூட்டத்தின் தொடக்க உரையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த பிரதமர்,
“உக்ரைன் மக்களுக்கு எதிராக பலிஸ்டிக் ஏவுகணைகளைப் பயன்படுத்தி பயங்கரவாதப் பிரசாரத்தை முன்னெடுப்பதன் மூலம் தான் வெற்றி பெற முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் நம்புகிறார். ஆனால், இது ஒருபோதும் வெற்றிக்கு வழியமைக்காது என்பதை நாம் தெளிவாக உணர்த்த வேண்டும்” என்றார்.
மேலும், ” ஏவுகணைகளில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க எமது கூட்டணிக்கு அப்பாற்பட்ட நேச நாடுகளுடனும் இணைந்து செயற்பட வேண்டும்.
அத்துடன், எமது சொந்த வான் பாதுகாப்பு கையிருப்புகளைப் பயன்படுத்தி உக்ரைனுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டியது அவசியமாகும்” எனக் குறிப்பிட்டார்.
அத்துடன், மொஸ்கோவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ரஷ்யாவின் கச்சா எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) ஏற்றுமதிகள் மீது மேலும் தடைகளை விதிக்க வேண்டும் என்றும் பிரித்தானிய பிரதமர் அறைகூவல் விடுத்தார்.




