தையிட்டி காணி அளவீடு மே 15ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!
யாழ்ப்பாணம்-வலிகாமம் வடக்கு, தையிட்டி திஸ்ஸ விகாரை மற்றும் அதனைச் சூழவுள்ள பொது மக்களின் காணிகளை அளவீடு செய்யும் பணிகள், விகாராதிபதியின் எதிர்ப்பு மற்றும் நிர்வாகக் காரணங்களால் எதிர்வரும் மே மாதம் 15 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
தையிட்டி விகாரையைச் சூழவுள்ள 17 காணி உரிமையாளர்களின் காணிகளை இன்று வெள்ளிக்கிழமை அளவீடு செய்வதற்கு, கடந்த 11 ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக இணங்குமாறு கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் மற்றும் யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன் ஆகியோர் உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், விகாரை காணிகளைச் சட்டவிரோதமாக அளவீடு செய்ய முயற்சிப்பதாகக் கூறி, தையிட்டி விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் நேற்று இரவு பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்திருந்தார்.
அத்துடன், நேற்று இரவு தென்னிலங்கையிலிருந்து மூன்று பஸ்களில் வருகை தந்த பெருமளவானோர் விகாரையில் தங்கியிருந்தனர். இதனால் இன்று காலை முதல் அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டிருந்தது.
காணி உரிமையாளர்கள் காலை 8 மணி முதல் காணிகளை அடையாளப்படுத்தக் காத்திருந்த போதிலும், அரச அதிகாரிகள் முற்பகல் 9.30 மணி வரை வருகை தராததால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது.
பின்னர் வருகை தந்த மாவட்ட செயலாளர் தலைமையிலான குழுவினர், முதலில் விகாராதிபதியுடன் கலந்துரையாடினர்.
இதன்போது விகாரை வாசலில் காத்திருந்த காணி உரிமையாளர்களுடன் பொலிஸார் முரண்பட்டதுடன், சிவில் உடையில் இருந்த பொலிஸார் மக்களைப் புகைப்படம் எடுத்து அச்சுறுத்தினர் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
பின்னர் பொதுமக்களுடன் உரையாடிய யாழ். மாவட்ட அரச அதிபர் ம.பிரதீபன்,
“காணி அளவீடுகளை அனைத்துத் திணைக்களங்களும் ஒருங்கிணைந்து முன்னெடுப்பது பொருத்தமானது எனப் புத்தசாசன அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
எனவே, மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் காணி அளவீடு மேற்கொள்ளப்படும். இதற்கான திகதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும்” என்று தெரிவித்தார்.
இதன்போது குறுக்கிட்ட பொதுமக்கள், “ஏனைய இடங்களில் அளவீடுகள் இன்றி காணிகள் விடுவிக்கப்படும் நிலையில், இங்கு மட்டும் ஏன் அளவீடு செய்யப்படுகின்றது?
இந்த அளவீடு காணி விடுவிப்பதற்காக மட்டுமே அன்றி, சுவீகரிப்புக்காக அல்ல என்பதை எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கடும் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
மக்களின் இந்தக் கோரிக்கையை உரிய திணைக்களங்களுக்கு அனுப்பி வைப்பதாகவும், உரிமையாளர்களின் முன்னிலையிலேயே அளவீடுகள் நடத்தப்படும் என்றும் யாழ். மாவட்ட அரச அதிபரால் உறுதியளிக்கப்பட்டது.





