ஹோர்மூஸ் ஜலசந்தி விவகாரம் – அரபு நாடுகளின் தலைவர்களை சந்திக்கும் நேட்டோ குழுவினர்
ஹோர்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதில் நிலவும் முட்டுக்கட்டை குறித்து விவாதிப்பதற்காக, நேட்டோ வெளியுறவு அமைச்சர்கள் இன்று வளைகுடா அரபு நாடுகளின் அமைச்சர்களைச் சந்திக்க உள்ளனர்.
அமெரிக்கா-ஈரான் இடையே ஒரு இடைக்கால அமைதி ஒப்பந்தம் ஏற்பட்ட போதிலும், மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இந்த நீர்வழியில் பல வாரங்களாக பதற்றம் நிலவி வருகிறது.
இந்நிலையில் பதற்றங்களை தணிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் அமைச்சர்களை நேட்டோ தலைவர்கள் சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே ஓமானின் லிமாவிற்கு கிழக்கே ஒரு எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக செயல்பாடுகள் நிறுவனம் (UKMTO) தெரிவித்துள்ளது.
ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடந்து செல்லும் வர்த்தகக் கப்பல்கள் மீது ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படையினர் குறைந்தது இரண்டு ஏவுகணைகளை வீசியதாக ஆக்சியோஸ் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.




