உறவை கசப்பாக்கிய அந்தவொரு சம்பவம் – 18 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்தார் ஸ்ரீசாந்த்!
முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், தன்னைத் தாக்கியதற்காக ஹர்பஜன் சிங்கை மன்னிப்பதாகவும், ஆனால் அந்தத் தாக்குதலை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.
2008 ஐபிஎல் தொடரில் நடந்த அந்தச் சம்பவத்தை 18 ஆண்டுகளுக்குப் பிறகு நினைவு கூர்ந்தபோது அவர் இவ்வாறு கூறினார்.
அந்தத் தொடரில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் உலகப் புகழ்பெற்ற ஒரு கசப்பான நினைவாக மாறியிருந்தது.
அந்தச் சம்பவத்திற்குப் பிறகு இருவரும் நண்பர்களான போதிலும், சமீபத்தில் அதனை அடிப்படையாகக் கொண்டு விளம்பரம் ஒன்று எடுக்கப்பட்டது. இதன் காரணமாக அந்த நட்புறவு மீண்டும் முறிந்தது.
ஸ்ரீசாந்தின் கூற்றுப்படி, அந்த விளம்பரத்தின் மூலம் ஹர்பஜன் சிங் 80 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார்.
இருப்பினும், அந்த விளம்பரத்தை தனது இன்ஸ்டாகிராம் கணக்கிலும் பதிவிடுமாறு தன்னிடம் கூறியதாக ஸ்ரீசாந்த் குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து மலையாள செய்தி நிறுவனம் ஒன்றிடம் உ பேசிய அவர், அந்தச் சம்பவத்தை மன்னித்துவிட்டாலும், அதை ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று கூறினார்.
“யாராவது உங்களுக்குத் தீங்கு செய்தால், அவர்களை மன்னியுங்கள், ஆனால் மறந்துவிடாதீர்கள். நீங்கள் மறந்தால், அவர்கள் மீண்டும் அதே தவறைச் செய்வார்கள். அதற்கு ஹர்பஜன் சிறந்த உதாரணம்,” என்று அவர் கூறினார்.
அவர் ஹர்பஜனைத் தனது சகோதரராகக் கருதியதாகவும், தற்போது அவருடன் எந்த உறவிலும் இல்லை என்றும் கூறியுள்ளார்.





