அன்சாக் தினம் அனுஷ்டிப்பு – உலகம் முழுவதும் வீரர்களுக்கு அஞ்சலி, லண்டனில் இளவரசி கேட் மலர்வளையம்
போர்களில் உயிரிழந்த அவுஸ்திரேலிய மற்றும் நியூசிலாந்து வீரர்களை நினைவுகூரும் அன்சாக் தின (ANZAC Day) நிகழ்வுகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டன.
இதற்கமைய இங்கிலாந்தில், வேல்ஸ் இளவரசி கேட் (Kate ) லண்டனில் உள்ள செனோடாஃப் (Cenotaph) நினைவுச் சின்னத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
மேலும், வெஸ்ட்மின்ஸ்டர் அபே (Westminster Abbey) தேவாலயத்தில் நடைபெற்ற நினைவேந்தல் மற்றும் நன்றி செலுத்தும் நிகழ்விலும் அவர் கலந்துகொண்டார்.
இதற்கு முன் நடைபெற்ற அதிகாலை நிகழ்வில் இளவரசி ஆன் (Princess Anne) பங்கேற்றார். ஹைட் பார்க் கார்னர் (Hyde Park Corner) பகுதியில் உள்ள வெலிங்டன் ஆர்ச் (Wellington Arch) நினைவுச் சின்னத்தில் அவர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு In Flanders Fields கவிதையும் வாசிக்கப்பட்டது.
அவுஸ்திரேலியாவில், ‘வெல்கம் டு கண்ட்ரி’ (Welcome to Country) எனப்படும் பாரம்பரிய வரவேற்பு நிகழ்வுகளின் போது சில இடங்களில் சிறிய குழுக்களின் எதிர்ப்பால் நிகழ்வுகள் சற்று பாதிக்கப்பட்டன.
மெல்போர்ன் (Melbourne), பெர்த் (Perth), சிட்னி (Sydney) நகரங்களில் இந்தச் சம்பவங்கள் இடம்பெற்றதாகவும், சிட்னியில் ஒருவரை காவல்துறை கைது செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், British Royal Family அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளக் கணக்கில் ANZAC வீரர்களின் படத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது. “நாம் மறக்க வேண்டாம்” (Lest we forget) என்ற வாசகத்துடன், Gallipoli Campaign காலத்தில் வீரர்கள் பயணிக்கும் காட்சி பகிரப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ஆம் திகதி அனுசரிக்கப்படும் அன்சாக் தினம், 1915 ஆம் ஆண்டு துருக்கியின் காலிபோலி (Gallipoli) கடற்கரையில் ANZAC படைகள் தரையிறங்கியதை நினைவுகூரும் வகையில் தொடங்கப்பட்டது.
இந்த நினைவேந்தல் நிகழ்வுகள் காலிபோலி (Gallipoli) மற்றும் Villers-Bretonneux போன்ற இடங்களிலும் நடைபெற்றன. Villers-Bretonneux என்பது முதலாம் உலகப் போரின்போது அவுஸ்திரேலிய படைகள் பாதுகாத்த ஒரு பிரெஞ்சு கிராமமாகும்.





