ஜமால் கஷோகியின் கொலை வழக்கை விசாரிக்க தனி நீதிபதி நியமனம்!
பத்திரிகையாளர் ஜமால் கஷோகியின் கொலை தொடர்பான விசாரணையை வழிநடத்த பிரெஞ்சு நீதிபதி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்நாட்டின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு வழக்கறிஞர் அலுவலகம் (PNAT) நேற்று இந்த தகவலை தெரிவித்தது.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
சித்திரவதை, கட்டாயமாக காணாமல் போகச் செய்தல் ஆகிய குற்றச்சாட்டுகள் மற்றும் மனித உரிமை அமைப்புகளான டிரையல் இன்டர்நேஷனல் மற்றும் ரிப்போர்ட்டர்ஸ் விதவுட் பார்டர்ஸ் ( TRIAL International and Reporters Without Borders) தாக்கல் செய்த முறைப்பாடுகளையும் விசாரணையின்போது கவனத்தில் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2018-ல் இஸ்தான்புல்லில் உள்ள சவூதி தூதரகத்தில் இருந்து வெளியேச் சென்ற ஜமால் கஷோகி (Khashoggi) மர்மமான முறையில் கொல்லப்பட்டார். அவருடைய உடல் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இனங்காணப்பட்டது.
இந்நிலையில் இந்த நடவடிக்கைக்கு சவூதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (Mohammed bin Salman.) உத்தரவிட்டதாக அமெரிக்க உளவுத்துறை நம்பியது.
இருப்பினும் கொலைக்கு உத்தரவிட்டதை பட்டத்து இளவரசர் மறுத்துள்ளார். ஆனால் அது “தனது மேற்பார்வையின் கீழ்” நடந்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு இன்றுவரை தீர்வின்றி தொடர்கின்ற நிலையில், பிரான்ஸ் மேற்படி நடவடிக்கை எடுத்துள்ளது.




