Belfast நகரில் வன்முறை வெடிப்பு: பல வீடுகள் தீக்கிரை: பின்னணி என்ன?
வட அயர்லாந்தின் Belfast நகரில் திங்கள்கிழமை இரவு நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலைத் தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை இரவு வெடித்த தீவிர வன்முறையில் பல வீடுகள் மற்றும் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியேற வேண்டிய பயங்கரமான சூழ்நிலை ஏற்பட்டது.
இந்தத் தாக்குதலை நடத்தியவர் புலம்பெயர்ந்தவர் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியதால், தீவிரமான குடியேற்ற எதிர்ப்புப் போராட்டங்கள் உருவெடுத்தன.
சமூக ஊடகங்களில் பரவிய குடியேற்றவாசிகளுக்கு எதிரான Anti-immigration போராட்ட அழைப்புகளைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான முகமூடி அணிந்த இளைஞர்கள் வீதிகளில் இறங்கி வணிக நிறுவனங்கள் மீதும் தாக்குதல் நடத்தினர்.
நிலைமையைக் கட்டுப்படுத்த தீயணைப்பு மற்றும் அவசரக்கால சேவையினர் 62 வன்முறைச் சம்பவ இடங்களுக்குச் சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
திங்கள்கிழமை இரவு Kinnaird Avenue குடியிருப்புப் பகுதியில் நபர் ஒருவர், தரையில் விழுந்து கிடந்த 40 வயது மதிக்கத்தக்க ஒருவரின் தலை மற்றும் கழுத்துப் பகுதியில் கத்தியால் கொடூரமான முறையில் தாக்கியுள்ளார்.
அங்கிருந்த பொதுமக்கள் சிலர் தலையிட்டு தாக்குதலைத் தடுத்தனர். இந்த அதிர்ச்சிகரமான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் கண்டன அலையை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட நபர் கண், முகம் மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திலிருந்து சமையலறை கத்தி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தக் கொலை முயற்சி வழக்கில் சூடான் நாட்டைச் சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் மீது கொலை முயற்சி, பொது இடத்தில் கூர்மையான ஆயுதம் வைத்திருத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அவர் புதன்கிழமை பெல்பாஸ்ட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
காவல்துறை விசாரணையில், அவர் 2023 பெப்ரவரியில் பாரிஸிலிருந்து டப்ளினுக்கு விமானம் மூலம் வந்து, பின்னர் அயர்லாந்து எல்லை வழியாக வட அயர்லாந்திற்குள் நுழைந்து புகலிடம் கோரியுள்ளார்.
அவருக்கு 2028 வரை பிரிட்டனில் (UK) தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
எனினும், இந்தத் தாக்குதலுக்கும் பயங்கரவாதத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று புலனாய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.







