இலங்கை அரசாங்கத்திடம் இருந்து ஓய்வூதியம் எதுவும் கிடைக்கவில்லை : காணியை விற்றே வாழ்கிறேன் – சந்திரிகா!
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஜனாதிபதி பதவியிலிருந்து ஓய்வுபெறும் போது தனது வங்கிக் கணக்கில் பணம் இல்லை எனவும், தற்போது காணியை விற்று வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் புதிதாக பதவியேற்றுள்ள அரசாங்கம் ஊழல் மோசடி தொடர்பில் முன்னாள் ஆட்சியாளர்களின் விசாரணைகளை நடத்தி வருகிறது. இதற்காக ஜனாதிபதியின் நேரடி கண்காணிப்பின் கீழ் சிறப்கு புலனாய்வு குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த விசாரணையில் கலந்துகொண்டப்பின் கருத்து வெளியிட்டுள்ள அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசாங்கத்திடம் இருந்து தாம் எதையும் பெறப்போவதில்லை. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனக்கு ஒன்பது வருடங்களாக ஓய்வூதியம் வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் யாரிடமிருந்தும் சாப்பிடவில்லை. எங்களிடம் இருப்பதை மட்டுமே மற்றவர்களுக்குக் கொடுத்தோம். நான் ஜனாதிபதியாக இருந்து வீட்டிற்குச் சென்றபோது, என் வங்கிக் கணக்கு உண்மையில் ஓவர் டிராஃப்ட் ஆனது. பின்னர், நான் நிலத்தை விற்று வாழ்கிறேன்.
எனக்கு அரசாங்கத்திலிருந்து எதுவும் கிடைக்கவில்லை. மகிந்த ராஜபக்ச ஆட்சி செய்தபோது ஒன்பது வருடங்களாக எனக்கு ஓய்வூதியம் கூட வழங்கப்படவில்லை, என்னிடம் 4 வாகனங்கள் உள்ளன, 4 கார்கள் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.