நேபாள வெள்ளப் பேரழிவு: புனரமைப்புப் பணிகளுக்கு 5 பில்லியன் வரை டொலர்கள் தேவை
நேபாளத்தில் இந்த வாரம் ஏற்பட்ட பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கிற்குப் பின்னர், நாட்டின் புனரமைப்புப் பணிகளுக்காக 4 பில்லியன் முதல் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை தேவைப்படலாம் என அந்நாட்டின் நிதியமைச்சர் ஸ்வர்னிம் வாக்லே (Swarnim Wagle) தெரிவித்துள்ளார்.
இது அந்நாட்டுப் பொருளாதாரத்தின் மொத்த மதிப்பில் கிட்டத்தட்ட பத்தில் ஒரு பங்கிற்குச் சமமான தொகையாகும்.
“ஆரம்பக்கட்ட மதிப்பீட்டின்படி $4 பில்லியன் முதல் $5 பில்லியன் வரை தேவைப்படலாம். இது ஒரு முதற்கட்ட மதிப்பீடு மட்டுமே.
2015 ஆம் ஆண்டு நிலநடுக்கத்திற்குத் தேவைப்பட்டதை விட மிகக் குறைந்த அளவிலான நிதியே இதற்காகத் தேவைப்படும். இழப்புகள் மற்றும் சேதங்கள் குறித்தான மதிப்பீடுகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று வாக்லே நிதியமைச்சர்
கூறினார்.
கடந்த புதன்கிழமை இமயமலை நதிப் படுகைகளில் ஏற்பட்ட பனிப்பாறை சரிவு காரணமாகப் பாறைகள், பனி, சேறு மற்றும் இடிபாடுகள் பேரலை என அடித்துச் செல்லப்பட்டன.
இந்தத் திடீர் வெள்ளப்பெருக்கில் நேபாளம் மற்றும் சீனாவின் திபெத் பிராந்தியத்தில் 600க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதுடன், 2,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
எல்லைப் பகுதிகளில் உள்ள நகரங்களைத் தரைமட்டமாக்கிய இந்த வெள்ளப்பெருக்கு, பாலங்கள் மற்றும் வீதிகளை அடித்துச் சென்றதுடன், நாட்டின் முக்கிய நீர்மின் நிலையங்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் மிக மோசமான பேரழிவாகப் பதிவான 2015 ஆம் ஆண்டு 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட $9 பில்லியன் புனரமைப்புச் செலவை விட, தற்போதைய மதிப்பீடு ஏன் குறைவாக இருக்கும் என்று வாக்லே விரிவாகக் குறிப்பிடவில்லை.
அந்த நிலநடுக்கத்தில் சுமார் 9,000 பேர் உயிரிழந்ததுடன், அரை மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் நாசமாகின. மேலும், நாட்டின் பொருளாதாரத்தில் சுமார் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இருப்பினும், வெளிநாட்டுப் பணப்பரிமாற்றம், சுற்றுலாத்துறை மற்றும் நீர்மின்சாரத்தை பெரிதும் நம்பியிருக்கும் நேபாளப் பொருளாதாரத்திற்கு புதன்கிழமை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு ஒரு பெரும் பின்னடைவாக அமையும். இப் பேரழிவு, நாட்டின் மொத்த மின் உற்பத்தித் திறனில் 12% க்கும் அதிகமான பங்களிப்பைக் கொண்ட மின் திட்டங்களைப் பாதித்துள்ளது.




